போடி நாயக்கனூர் ஜமீன் வரலாறு:
போடி நாயக்கனூர் ஜமீன் வரலாறு:
தேனி மாவட்டத்தில் உயர்ந்து நிற்கும் மலைகள், பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளதுதான் போடிநாயக்கனூர்.
இந்த ஊருக்கு இப்போதும் பெருமை சேர்ப்பது இங்குள்ள ஜமீன் அரண்மனைதான்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அரண்மனை போல அமைக்கப்பட்ட இந்த ஜமீன் மாளிகை இப்போதும் மெருகு குலையாமல் 3 அடுக்கு மாளிகையாகக் காட்சியளிக்கிறது. கலையழகுமிக்க யாழி சிற்பங்கள், எழில் மிகுந்த மூலிகை ஓவியங்கள், பிரமிப்பூட்டும் அறைகள் என பல ஆச்சரியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஜமீன் மாளிகை.
ஆந்திர மாநிலம், குத்துபல்லாரி (தற்போது கொத்துபல்லாரி) மாவட்டத்தில் உள்ள கூட்டி என்ற பகுதியை ஆண்டவர்கள் போடி ஜமீனின் முன்னோர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் கம்பளத்து நாயக்கர் இனத்தில் சீலவார் பிரிவைச் சேர்ந்தவர்கள்
1376 முதல் 1413 வரையில் ராகநாயக்கர் என்ற ராமநாயக்கர், 1413 முதல் 1454 வரையில் ஜக்குநாயக்கர் என்ற சக்கன நாயக்கர், 1454 முதல் 1483 வரையில் முத்து பங்காரு நாயக்கர், 1502 முதல் 1520 வரை போடிமுத்து நாயக்கர், 1520 முதல் 1531 வரையில் ஜக்குமுத்து நாயக்கர் 1540 முதல் 1554 வரை சீலபோடி நாயக்கர் என பலர் பதவி வகித்து வந்தனர்.
சீலபோடி நாயக்கர் ஆண்டபோது மல்லாக்கான் என்ற வீரன் தன்னை சிற்றரசர்கள் யாரும் வெற்றி கொள்ளமுடியாது என சவால்விட்டுத் திரிந்த நிலையில், சீலபோடி நாயக்கர் வெற்றிகொண்டு திருமலை என்ற சிறப்பு பட்டத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
bodijameen3 இந்த வெற்றியால் சீலபோடி நாயக்கர் பெயராலே அவரது பகுதி போடைய நாயக்கனூர் என்று வழங்கப்பட்டதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். இவருக்குப் பிறகு 1554 முதல் 1576 வரையில் திருமலை போடையநாயக்கர் பட்டம் வகித்தார். அவருக்குப் பின் 1576 முதல் 1602 வரை திருமலை பங்காரு முத்துநாயக்கர் பதவிவகித்தார்.
நாயக்கர் மன்னர் காலத்தில் இவர் திருமஞ்சனக் கோட்டை காவல் பொறுப்பை ஏற்றிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மேலும் பெரியகுளம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு மண்டகப்படியும், தேரோட்டமும், பிரம்மோற்சவமும் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
சின்னமனூர் அருகே பூலாநந்தர் கோயில் கட்டியது, சிங்காரத்தோப்பு நந்தவனம் அமைத்தது என பல சமூக செயல்பாடுகள் இக்கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளன. இவருக்குப் பிறகு திருமலை போடைய நாயக்கர் 1602 முதல் 1632 வரை பொறுப்பு வகித்தார். பின் முக்கண்ண நாயக்கர் 1632 முதல் 1684 வரையிலும், ராசுநாயக்கர் 1684 முதல் 1701 வரையிலும் பொறுப்பில் இருந்துள்ளனர்.
ராசு நாயக்கர் பொறுப்பில் இருந்தபோது பார்வையற்ற பெண் ஒருத்தியின் கனவில் ஸ்ரீ மீனாட்சியம்மன் வர, தனக்கு பார்வை தருமாறு அப்பெண் வேண்டிக்கொண்டார். ஒரு கண்ணில் பார்வை அளித்த அருள்மிகு மீனாட்சியம்மன், மறுகண்ணில் பார்வையை ராசு நாயக்கரிடம் சென்று பெறுமாறு கூறி மறைந்து விட்டாராம். இதை ராசுநாயக்கரிடம் அப்பெண் கூற. உடனே ராசுநாயக்கர் தனது கண்ணைக் கொடுத்து பெண்ணுக்கு பார்வை
கிடைக்கச் செய்தாராம். இதனால் அவர் “கண்கொடுத்த ராசு நாயக்கர்’ என்றும் அழைக்கப்பட்டார். மிகுந்த தெய்வபக்தி உடையவராகவும், குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் மீது ஆழ்ந்த பக்தி உடையவராகவும் ராசுநாயக்கர் விளங்கியதை இச்சம்பவத்தின் மூலம் அறியமுடிகிறது. தற்போது போடியில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
போடியில் 1701 முதல் 1737 வரை சக்கரப்பநாயக்கர் பதவி வகித்தார். இவருக்கு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு அடுத்தபடியாக பூச்சரக்கொடை வழங்கும் உரிûமை மதுரை நாயக்க அரசரால் வழங்கப்பட்டுள்ளது.
சக்கரப்ப நாயக்கருக்கு குழந்தை இல்லை. இதனால் அவரது மனைவி தோப்பம்மாள் போடியின் ஜமீனாக 1737 முதல் 1747 வரை பொறுப்பு வகித்துவந்தார். அவருக்குப் பிறகு சங்கரப்ப நாயக்கரின் சகோதரர் சீலஐக்கண்ண நாயக்கர் 1747 முதல் 1775 வரை பதவி வகித்தார்.
அப்போது கர்நாடக நவாப்பின் சுபேதாராக இருந்த மீராசாகிப் திண்டுக்கல்லில் இருந்தவாறு போடி ஜமீனிடம் ஆயிரம் பணம் கப்பமாக வசூலித்து வந்தார். அந்தப் பணத்தை ஆங்கிலேயர் காலத்தில் மதுரை ஆட்சியராக இருந்த மில்லட் | 2500 ஆக உயர்த்தினார். சீலஐக்கண்ண நாயகருக்குப் பிறகு அவரது மகன் போடிநாயக்கர் 1775 லிருந்து 1778 வரை ஜமீனாக இருந்தார். இவருக்கும் குழந்தை இல்லாததால் இவரது சகோதரர் திருமலை போடிநாயக்கர் 1778 லிருந்து 1800 வரை ஆட்சி செய்து வந்தார். இவரது காலத்தில் கப்பத்தொகை | 7325 ஆக உயர்ந்தது. இவருக்கு அடுத்து திருமலை போடிராசு நாயக்கர் வந்தார். இவர் திப்பு சுல்தானிடமிருந்து தன்னை பாதுகாக்க கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இவருக்கும் குழந்தை இல்லாததால் ஆறு பெண்களை மணந்தார். இதையடுத்து ராநாதக் கவிராயரை அழைத்து பாலபிரபந்தம் பாடிட திருமலை போடிராசு நாயக்கர் கோரியதாகவும், கவிராயர் கவிதை பாடிய பிறகு ஆறாவது மனைவிக்கு 5 மகன்களும், ஒரு மகளும் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருக்குப் பிறகு பங்காரு திருமலை போடி நாயக்கர் 1784 முதல் 1862 வரையில் ஜமீனாக இருந்தார். இவர் கொட்டகுடி ஆற்றில் | 4 லட்சத்தில் அணை கட்டியுள்ளார். இப்போது போடியில் பிரமாண்டமாக நிற்கும் அரண்மனையைக் கட்டியவரும் இவரே. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கட்ப்பட்டதும் இவர் காலத்தில்தான்.
ஆங்கிலேய ஆட்சியர் ரோஸ்பீட்டருடன் வேட்டைக்குச் செல்லும் வழக்கத்தை திருமலை போடிநாயக்கர் கொண்டிருந்தார். இதனால், நாயக்கருக்கு தங்கப்பதக்கமும் ஆங்கிலேயரால் வழங்கப்பட்டுள்ளது. இவரது காலத்தில் குற்றம் குறைந்திருந்ததாகவும், இதை பாராட்டி ஆங்கிலேயர் சான்றும் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
1862 -ல் திருமலை போடி நாயக்கர் இறந்தார். அப்போது அவரது மகன் திருமலை போடைய காமராஜ பாண்டிய நாயக்கர் சிறுபிள்ளையாக இருந்தார். இதையடுத்து ஆங்கிலேயர்களே ஜமீனை நேரடியாக நிர்வகித்தனர். காமராஜ பாண்டியர் வளர்ந்து பெரியவரானதும் 1862 முதல் 1888 வரையில் ஜமீனாக இருந்தார். மதுரை மேலமாசி வீதியில் உடுப்பி ஹோட்டல் பகுதியில் பெரிய மாளிகை கட்டினார். கொடைக்கானல் செல்லும் வழியில் ஆங்கிலேயருக்கு ஓய்வுவிடுதி கட்டித்தந்தார். காமராஜ் பூபால சமுத்திர கண்மாயை வெட்டினார். அவருக்குப் பிறகு அவரது மகள் காமுலு அம்மாள் ஜமீன்தாரணி ஆனார்.
1888 முதல் 1921 வரை பொறுப்பிலிருந்த காமுலு அம்மாள் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் கட்டியுள்ளார். அவர் ஏற்படுத்திய பள்ளிகள் இன்றும் உள்ளன. விசுவனேஸ்வரர், சென்றாயப் பெருமாள் உள்ளிட்ட ஆலங்களையும் அவர் கட்டியுள்ளார். எஸ்டேட்டில் காபி பயிரிடும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியது காமுலு அம்மாள் என்கிறார்கள்.
அவருக்குப்பின் 1921-ல் டி.வி.கே. காமராஜபாண்டிய நாயக்கர் 1921 முதல் 1941 வரையில் பொறுப்பு வகித்தார். இவர் மதுரை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகவும், 1929 லிருந்து போடிநாயக்கனூர் முனிசிபல் கவுன்சில் சேர்மனாகவும் இருந்தார். 1930 ல் சென்னை மாநில சட்டப்பேரவையில் எம்.எல்.சி.யாக இருந்தார். அப்போது தமிழில் பேசிய முதல் எம்.எல்.சி. என்ற பெயரும் காமராஜ பாண்டியநாயக்கருக்கு உள்ளது.
இத்தகைய செயலை தீரர் சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், தற்போதைய முதல்வர் கருணாநிதி ஆகியோர் பாராட்டியுள்ளனர். 1938 ல் சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார். அத்துடன் போடிநாயக்கனூர் விக்டோரியா நினைவு உயர்நிலைப் பள்ளி குழு தலைவர், மதுரை ஜில்லா நில உரிமையாளர்கள் சங்கத்தலைவர், திருவனந்தபுரம் ஏல விவசாயிகள் சங்கத் தலைவர், ஏல கூட்டுறவு வங்கித்தலைவர் மதுரை ஜில்லா இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு தலைவர் என பல பதவிகளையும் காமராஜ பாண்டிய நாயக்கர் வகித்துள்ளார்.
டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டிலும் அவர் சிறந்துவிளங்கியுள்ளார். இவருக்கு ஆண் குழந்தை இல்லை. பெண் வாரிசுள் மட்டுமே இருந்தனர். 1941-ல் இவர் காலமானார். இதனால் அவரது உறவினராகவும், வாரிசாகவும் விளங்கிய டி.பி.எஸ்.எஸ்.ராஜபாண்டியநாயக்கர் 1941 முதல் 1968 வரையில் ஜமீன் பதவி வகித்தார்.
அவருக்கு பிறகு அவரது மகன் டி.பி.எஸ்.எஸ்.ஆர். வடமலைமுத்து சீலராஜய பாண்டியன் 1968 முதல் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். அவரது மனைவி முத்துவீரசுருளியம்மாள் தற்போது உள்ளார்
- பகிர்வு
Comments
Post a Comment