புதுப்பட்டி செப்பேடு கி.பி.1160
புதுப்பட்டி செப்பேடு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் என்ற ஊரில் வசிக்கும் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் செப்பேடு ஒன்று இருப்பதாகத் தகவ கிடைத்ததையடுத்து, திரு. கோட்டைப்பாண்டியன் அவர்களைச் சந்தித்தபோது, அவர் தம் வசமிருக்கும் செப்பேட்டினைக் காண்பித்ததோடு, அச்செப்பேடு ஏற்கனவே சென்னையிலுள்ள தொல்லியல்துறைப் பதிவு அலுவலர் திரு. மா. சந்திரமூர்த்தி அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பிக்கப்பட்டு அவரால் வாசிக்கப்பட்டுவிட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தார். 1 மேலும், தமது மூதாதையர்கள், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திலுள்ள செக்காரக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும், அனுப்பக்கவுண்டர் குலத்தைச் சேர்ந்த தமது முன்னோர்களால் கம்பளத்து நாயக்கர் குலத்தவர்க்கு வழங்கப்பட்ட செப்பேடு ஒன்று செக்காரக்குடியிலிருந்தது என்றும், அச்செப்பேட்டுக்குரியோர் தற்போது தெய்வச் செயல் புரத்துக்கு அருகிலுள்ள புதுப்பட்டியில் வசிக்கின்றனர் என்ற விவரத்தையும் தெரிவித்தார். இவ்விவரங்களின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தெய்வச் செயல்புரத்தையடுத்...