புதுப்பட்டி செப்பேடு கி.பி.1160
செப்பேட்டின் அமைப்பு
17 செ.மீ. நீளமும் 10 செ.மீ அகலமும் கொண்ட இச்செப்பேட்டின் இருபுறங்களிலும் தமிழில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேட்டின் முன்பக்கத்தின் தலைப்பகுதியில் மயில் தோகைகளின் சின்னம் வரையப்பட்டுள்ளது. செப்பேட்டின் உரிமையாளர்கள், இப்பகுதியிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் சாதிப் பிரிவாகிய “தோகலவார்” பிரிவைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் ஆவர். “தோகல” என்ற தெலுங்குச் சொல், தோகை, வால் என்ற பொருளுடையது. எனவே இவர்கள், மயில் தோகையைக் குலச் சின்னமாகக் கொண்டவர்கள் எனத் தெரிகிறது.2
காலமும் செய்தியும்
செப்பேட்டில் குறிப்பிடப்படும் சாலிவாகன ஆண்டு முதலிய குறிப்புகள், கி.பி.1140-க்குப் பொருந்தி வருகின்றன. ஆனால் செப்பேட்டின் வாசகங்கள், கி.பி.18-ஆம் நூற்றாண்டைய தமிழ் நடையில் அமைந்துள்ளன. எனவே, கி.பி.18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ, 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி இப்பகுதியின் நிலவருவாய் நிர்வாகத்தை ஏற்றபோது, இச்செப்பேடு போலியாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நெல்லைச் சீமையில் இவ்வாறு பல ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டன எனத் தெரிகிறது.3 இருப்பினும், இச்செப்பேடு முற்றிலும் புறக்கணிக்கத்தக்கதன்று. இச்செப்பேடு வழங்கப்படக் காரணமாக இருந்த அனுப்பக் கவுண்டர் குலத்தவர்கள், கி.பி.1645-இல் செக்காரக்குடி, பேரூரணி ஆகிய ஊர்களில் அதிகாரம் செலுத்திவந்தனர் என்றும், நற்குடி வேளாளர்களுக்கும் அனுப்பக் கவுண்டர்களுக்குமிடையே இது தொடர்பாக வழக்கு ஏற்பட்டபோது திருமலைநாயக்கரின் ஆணைப்படி வழக்கு தீர்த்துவைக்கப்பட்டது என்றும் பிற செப்பேட்டு ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவருகிறது.4 17-ஆம் நூற்றாண்டில், தோகலவார் பிரிவைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள், அனுப்பக் கவுண்டர்களின் ஆதரவுடன் இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும்.
இச்செப்பேட்டில், சீவலமாற பராக்கிரம பாண்டியன் ஆணைப்படி, செக்காலைக்குடியின் அதிகாரியான ஒள்ளிக் கவுண்டர், மயிலம் பராக்ரம பாண்டிய நாயக்கருக்குச் செக்காலைக் குடியின் உள்காவல் அதிகாரத்தை வழங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்காவல் என்பது பாடி காவல் எனக் கொள்ளலாம். பாண்டிய மன்னர், அனுப்பக் கவுண்டர், கம்பளத்து நாயக்கர் – மூன்று சாதியினரும் காதில் பனையோலை அணியும் வகுப்பினர்4அ ஆதலாலும், பேரூரணியிலுள்ள “வீரமல்லம்மன் தேவி”5 எனப்படும் தெர்ய்வத்துக்குத் தாமும் அடியாதலாலும் அத்தெய்வத்தின் பூசாரியாகிய மயிலம் பராக்கிரம பாண்டிய நாயக்கருக்குத் தமது பெயரான பராக்கிரம பாண்டியன் என்ற பெயரைச் சூட்டியிருப்பதாலும், செக்காலைக்குடி உள்காவல் அதிகாரம் அவருக்கு வழங்க வேண்டுமென்று ஒள்ளிக் கவுண்டருக்குப் பாண்டிய மன்னர் சன்னது அனுப்பியுள்ளார். ஒள்ளிக் கவுண்டரும், தமது சாதி மரபை உருவாக்கியவர் வீரமல்ல தேவரானதால், வீரமல்ல தேவி வழியில் தமது தாயாதிகளான கம்பளத்து நாயக்கர்கள், தமக்கு ரத்தசம்பந்தம் உள்ளவர்களாக நிர்வாகம் செய்வார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, பாண்டிய மன்னன் ஆணை சரியென்று ஒத்துக் கொள்கிறார். அதன்படி, மயிலம் பராக்கிரம பாண்டிய நாயக்கர் மற்றும் அவருக்குச் சம்பந்தம் உள்ல மயிற்சின்னமராசு, தொப்பநாயக்கர் உள்ளிட்டாருக்கு ஒள்ளிக்கவுண்டர் பட்டயம் வழங்குகிறார். வீரமல்லதேவி பூசை, எட்டுநாள் நோன்பு ஆகியவற்றில் பராக்கிரம பாண்டிய நாயக்கருக்கு உள்ள உரிமை முதலியவற்றையும் வரையறுத்துள்ளார்.
1. இருபுறங்களிலுமாக, மொத்தம் 102 வரிகளில் எழுதப்பட்டுள்ள அச்செப்பேட்டில், கி.பி.1166-க்குச் சமமான ஆண்டுக் குறிப்புகள் உள்ளன. ஆயினும் 17-18-ஆம் நூற்றாண்டைய தமிழ் நடையிலேயே செப்பேடு அமைந்துள்ளது. சீவலமாற குலசேகர ராசா, செக்காலைக்குடி ஒள்ளிக் கவண்டன் மகன், கோட்டைக் கெம்பக் கவண்டனௌக்குப் பாஞ்சாலை மாகாணமான பேரூரணி வணிதசேகரக் கிராமத்தை நாட்டாண்மை, நிலைமை எல்லைக்காணி, காவல் ஆகியவற்றுக்காக வழங்கிய செய்தி அச்செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது.
2. தோகலவார் என்றால், “பசுமந்தைகளை உடையவர்கள்” என்று சில அறிஞர்கள் பொருள் கொண்டுள்ளனர். அக்கருத்து சரியானதாகத் தெரியவில்லை.
3. P.9, Land and Castes in South India, by Dharmakumar, Cambridge, 1965.
4. “நன்குடி” என்ற நூலில், பக்கம் 28இல், இச்செப்பேட்டின் வாசகங்கள் பதிக்கப்பட்டுள்ளன. (ஆசிரியர்:சிவகளை எஸ். பாலசுப்பிரமணிய பிள்ளை, 1920)
4அ. பாம்படம் அணிவிப்பதற்காகக் காதுத் துளையைப் பனையோலையைச் சுருட்டிச் செருகிப் பெரிதாக்குவர். (Pages 58-59, Land of Charity by Samuel Mateer, Asian Educational Services, Chennai, 1991.)
5. தூத்துக்குடி வட்டத்திலமைந்துள்ள பேரூரணியில் வீரமல்லம்மன் கோயில் உள்ளது. “வீரமல்லுதேவி” எனக் கட்டபொம்மன் சண்டைக்கும்மி குறிப்பிடுகிறது. (கட்டபொம்மன் வரலாறு அல்லது சண்டைக்கும்மி – அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பு, 1960)
6. சமூக ரெங்கபுரம் பட்டையத்தில், பேரூரணி கோட்டைக் கெம்பக் கவண்டர், செக்காலைக் குடி ஒள்ளிக் கவுண்டரின் மகனாகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் அச்செப்பேட்டின் காலக் குறிப்புகளின் படிபார்த்தால், புதுப்பட்டிச் செப்பேடு வழங்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த பின்னரே கோட்டைக் கெம்பக் கவண்டருக்குப் பேரூரணி ஊர். காணியாட்சியாக வழங்கப்பட்டுள்ளது எனக் கொள்ள வேண்டியதிருக்கிறது. எனவே “அய்யா பேரூரணி கோட்டைக் கெம்பக்கவண்டர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது.
7. “வல்ல மலைத் தெய்வம்” எனக் கொள்ளலாம். வல்ல நாடு மலை இப்பகுதியிலுள்ளது.
8. “சதாசிவ ரூபத்தைக் குடியில் தரிசனை கண்டதாலும்” எனக் கொள்ளலாம்.
9. அடிமை
10. திருவுளம்
11. தாயாதி, மனவாடு(தெலுங்கு) எனக் கொள்ளலாம்.
12. “ரத்தக் கலப்பாய் நிர்வாகம் பண்ணுயவார்களென்றும்”
13. “சமூக” விசேஷம் என்பது, “பாண்டிய அரசரின் சிறப்பான நடவடிக்கை” எனப் பொருள்படக்கூடும்.
14. “கண்டு வாளாவிருக்க மாட்டாள்” எனப் பொருள்படும்.
15. பொதிகை மலையில், பாணதீர்த்தம் உள்ள பகுதியிலிருக்கும் ஐயனார் கோயில் இந்த ஐயனார். “முத்துப்பட்டன் கதை” எனப்படும் வரலாற்றுக் கதைப்பாடலில் இடம் பெறும் ஐயனார் ஆவார். முத்துப்பட்டன், சமூக ரெங்கபுரம் பட்டையத்தில் “சக்கிலியப்பட்டன்” எனக் குறிப்பிடப்படுகிறான்.
16. தானியம்
17. மாட்டுத் தொழுவம்
18. மயில்கள், செய்தியனுப்பப் பயன்படும் புறாக்கள், சண்டைக் கோழிகள் போன்றவற்றை வளர்ப்பது தொடர்பான வழக்காக இருக்கலாம்.
19. நிட்சேபம் – புதையல் எனப் பொருள்படும்
20. அம்சம் – உரிமையில் அவரவர்க்குரிய பங்கு எனப் பொருள்படலாம்.
21. உடன்கூட்டத்தார் எனப் பொருள்படும்.
Comments
Post a Comment