சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1
வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்!
கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரை வீட்டுக்காவலிலும், சிறையிலும் அடைத்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி குமாரசாமி என்ற ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். சிறையில் முதலில் அவருக்கு கைக்கும், காலுக்கும், கழுத்துக்கும் விலங்கு போடப்பட்டு இருந்தது.

ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது.

புரட்சியாளர்கள் முந்நூறு பேருக்கும் மேற்பட்டோர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் கொண்டு, இடுப்பில் மஞ்சள் கச்சையணிந்து மந்திரங்களை வாயில் முணுமுணுத்துத் திருநீறைப் பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டே பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அருகில் வந்தனர். 

இத்தருணத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் சிறைக் காப்பாளர்களிடம் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்ய இப்பொருள்களை வாங்க அனுமதி பெற்றனர். உடனே தெரு வியாபாரிகள் கோட்டைக்குள் நுழைந்து சிறைவளாகத்திற்குச் சென்று ஊமைத்துரையும் அவரது தோழர்களும் அடைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டறிந்தனர்.

ஊமைத்துரையிடமிருந்து சைகை கிடைத்தவுடன் விடுதலை வீரர்கள், விறகுக் கட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த கைத்துப்பாக்கிகள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் இதர ஆயுதங்களையும் வெளியே எடுத்து சிறைக்கதவுகளை உடைத்தெறிந்தனர்.

சிறைக்காப்பாளர்கள் தாக்கப்பட்டு வெளியே தூக்கியெறியப்பட்டனர். ஊமைத்துரை விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயப் படையினர் தாக்கப்பட்டு சீர்குலைக்கபட்டனர். 

02.02.1801 பாளையங்கோட்டை சிறை தகர்ப்பும், ஊமைத்துரை சிறை மீட்பும் வரலாற்றில் ஒரு வீர நிகழ்வு

சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரையும் அவரது தோழர் களும் பாஞ்சாலங் குறிச்சியை நோக்கி முன்னேறினார். ஊமைத்துரையின் படையினர் ஆங்கிலேயரின் கண்காணிப்பு இடங்களையும் , அவர்களது உணவுக் களஞ்சியங்களையும் சூறையாடினர்.

ஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துகுடி ஆகியன புரட்சியாளர்கள் வசம் வந்தன.

பாளையங்கோட்டை சிறைச்சாலை ரகசிய  மீட்பில் கலந்து கொண்டவர்கள் முந்நூற்றி முப்பதியாரு பேர் என்றும் அதில் முன்னின்று தலைமை ஏற்று நடத்தியவர்கள் 12 பேர் அவர்களின் பெயர்கள்
1. ஆதிராமு நாயக்கர்
2. வீரசிங்கு நாயக்கர்
3. நாகம நாயக்கர்
4. அன்னகாமு நாயக்கர்
5. சென்னவ நாயக்கர்
6. சின்னபாலு நாயக்கர்
7. வீரலக்கு நாயக்கர்
8. விசயதளவாய் நாயக்கர்
9. அரசமுத்து நாயக்கர்
10. பாயும்புலி நாயக்கர்
11. ரணவீர நாயக்கர்
12. ராஜபொம்மு நாயக்கர் ஆகியோராவார். சிறைமீட்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துகொண்டார் ஊமைத்துரை.

பாளையங்கோட்டை சிறைச்சாலை தகர்த்தெறியப்பட்டு சிறையை விட்டு ஊமைத்துரை வெளியே வந்ததும், தமது இனத்தவர் மற்றும் திறண்டு இருந்த மானமுள்ள வீரர்கள் கூட்டத்த்தை பார்த்து மனதிற்குள் பெருமகிழ்ச்சி கொண்டார். 

அந்த நிலையிலேயே கும்பெனியர் மீது பாய்ந்து அங்குள்ள அதிகாரிகள், சேனதிபதிகள், பட்டாளங்களை வேட்டையாடிய பின்னரே பாஞ்சைக்கு போக வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். ஆனால் அங்கிருந்தவர் அவரை தடுத்து "இப்பொழுது வேண்டாம், பின்பு பார்த்துக்கொள்வோம்" என்று முறையிடவே அதற்கு சம்மதித்தார்.

ஆனால் அது ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் அது நடந்திருந்தால் கும்பெனியாருக்கு பெருத்த சேதம் அடைந்திருக்கும், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு எழுதி வைத்துள்ளனர் என்பது வரலாறு. அந்த சந்தர்ப்பம் நழுவிப்போனது பாஞ்சை பதிக்கு தீங்குமாய் வெள்ளையருக்கு சாதகமாய் அமைந்து விட்டது. என்ன செய்வது விதி வலியது என்றுதான் சொல்ல முடியும்.

பாஞ்சை படையின் தீரத்தை பார்த்த ஆங்கில அதிகாரி தாம் தப்பி பிழைத்ததையும், மேலும் பாஞ்சை பதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்ததையும் இவ்வாறு எழுதி இருக்கிறான் 👇

" They however, let slip the fairest opportunity they ever could have enjoyed of crippling our force...

..."There we must all have perished, unprepared and unresisting, since they were several hundred strong, even before they left the place"...
                  -(Records of Government)-

"எவ்வாறாயினும், எங்கள் படையை அழித்து ஒழித்து அவர்கள் என்றும் வெற்றி இன்பத்தை அனுபவித்திருக்கக் கூடிய மிகச் சிறந்த வாய்ப்பை அவர்கள் எப்படியோ நழுவ விட்டனர்".

"அவர்கள் நூற்றுக்கணக்கான  பலம் வாய்ந்த  போர் வீரர்களாக இருந்தனர். யாதொரு ஆயத்தமும், எதிர்ப்பும் இல்லாமல் இருந்த எங்களை நோக்கி வந்திருந்தால், அந்த இடத்தை விட்டு அவர்கள் செல்லும் முன்பே, நாங்கள் அடியோடு அழிந்து போயிருப்போம்". 

இதில் நாம் புரிந்து கொள்வது யாதெனில், ஆயத்தமில்லாத அந்த கும்பனி படை மீது பாஞ்சை படை பாய்ந்திருந்தால் மொத்தமாக அழிக்கபட்டிருக்கும், ஆனால் ஊமைத்துரை நேர்மையான மாவீரன் அதனால் "உன்னுடைய கும்பெனி படை அனைத்தையும் ஒருங்கே திரட்டி கொண்டு என் கோட்டைக்கு வா! உன்னை அங்கே பார்த்து கொள்கிறேன்"  என்ற வீர முழக்கம் செய்திருப்பார் என்ற வீர உணர்வு நம் நெஞ்சிலே நிகழ்வதை இன்றும் நம்மால்உணர முடிகிறது.

Comments

Popular posts from this blog

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)