11. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - ஸ்ரீவைகுண்டம் மீட்புபோர் தோற்றுத் திரும்பிய மேஜர் ஷெப்பர்டு(Major Sheppard)
ஸ்ரீவைகுண்டம்
தென்னாட்டில் கும்பெனியர் வசூல் செய்த வரிகளையும், தானியங்களையும், யுத்த ஆயுத தளவாடங்களையும் சேகரித்து வைக்கும் முக்கிய தலைமை இடமாக ஸ்ரீவைகுண்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏற்கனவே யுத்த தளவாடங்களை கைப்பற்றிய பாஞ்சை படையினர் மொத்த தலைமை இடத்தையும் கைப்பற்ற எண்ணினர். அதன் பேரில் ஸ்ரீவைகுண்டத்தின் மீது படையெடுத்து விரைந்து பிடித்துக் கொண்டனர்.
அந்த செய்தி பாளையம்கோட்டை தலைமை தளபதிக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவைகுணடம் கும்பெனியருக்கு முக்கியமான கேந்திரம் என்பதால் எப்படியும் மீட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். மேலும் கும்பெனி உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக முறையே பறிபோய் கொண்டிருப்பதை எண்ணி பரிதாபமாய் வருந்தினர்.
ஸ்ரீவைகுண்டம் மீட்பு போர்
உடனே மேஜர் ஷெப்பர்டு தலைமையில் ஒரு பெரும் சேனையை தயார் செய்து அனுப்பினர். பாளைங்கோட்டைக்கு கிழக்கே பதினாறு மையில் தூரத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் விரைந்தது கும்பெனி படை. மார்ச் 13 ந் தேதி போரைத் துவங்கினர். பாஞ்சை வீரர்கள் வெறிகொண்டு தாக்கினர். முடியும்வரை போராடிப் பார்த்த கும்பெனி படைக்கு யாதும் பலனளிக்கவில்லை. மூன்று நாட்களாக மன்றாடி பார்த்தனர். முடிவில் 16ந் தேதி தோற்றுப் பின்வாங்கி பாளையங்கோட்டை நோக்கி ஓடத் துவங்கினர். பாஞ்சை படையனர் பின் தொடந்து விடாமல் தாக்கினர், கொடிய புலிகளிடமிருந்து தப்பிய மாட்டு மந்தைகள் போல் பட்டாளங்கள் சிதறி ஓடின. மேலும் அந்த நிகழ்வை இப்படியும் எழுதி வைத்தனர்.
"The enemy annoyed them the whole way"
"எதிரிகள் வழிமுழுதும் பட்டாளங்களைத் தொல்லை படுத்தினர்."
ஊமைத்துரையின் படைகள் வெற்றிமேல் வெற்றி பெற்று பேரும் புகழோடும் விளங்கி நின்றனர்.
இந்த வீரர்களுடன் பகையை வளர்த்துக் கொண்டது மிகப்பெரிய தவறு என கும்பெனி தலைவர்களில் சிலர் கருத தொடங்கினர்.
#முரசு 11
உத்தம புத்திரன்
ReplyDelete