சலகெருது ஆட்டம்
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பாரம்பரிய கலைகளை ஆடியும், விழாவை கொண்டாடுவது வழக்கம்.
அவ்வகையில் இந்தாண்டும் பண்டிகையை, பாரம்பரிய கலைகளுடன் கொண்டாடி வருகின்றனர். அதில், ஆனைமலை அருகே கரியாஞ்செட்டிபாளையத்தில் பாரம்பரியம் மாறாமல் சலகெருது ஆட்டம் விளையாடி வருகின்றனர்.
இறைவன், கால்நடை உருவில் வரம் அளிப்பதாக கருதும் கிராம மக்கள், பாரம்பரிய கலையை பாதுகாக்கின்றனர்.
பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் காளைக் கன்றுகள், இறைவனுக்கு சொந்தமானது என கருதப்படுகிறது. ஆகையால், இந்த கன்றுகள் கோவில்களுக்கு தானமாக அளிக்கப்படுகிறது.
அதனை தத்தெடுக்கும் கிராம மக்கள், அவற்றை சலங்கை மாடுகளாக மாற்றுகின்றனர். ஒவ்வொரு கிராமத்தினரும், ஒரு சலங்கை மாட்டை தேர்ந்தெடுத்து, 'சலகெருது' என பெயரிட்டு, ஆல்கொண்டமாலனுக்கு உரியதாக போற்றப்படுவதால், இந்த கால்நடைகளுக்கு மூக்காணங்கயிறு கூட அணிவிப்பதில்லை.
இந்த கன்றுகள், கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரியும். மார்கழி மாத இரவுகளில், ஊர் பொது இடத்தில், எருதுக்கு சலங்கை அணிவிக்கப்படும்.
இசைக்கு தகுந்தாற்போல் ஆடி செல்ல, உறுமி இசை கலைஞர் தலைமையில், தேவராட்ட குழுவினரால் இந்த கன்றுகள் தயார்படுத்தப்படுகிறது.
ஆட்டக்காரர் தனது கைகளில் இரண்டு நீளமான குச்சிகளை கையில் ஏந்தி, உறுமி இசைக்கேற்ப காளையின் முன் ஆடிச் செல்வர். ஆட்டக்காரரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு, தனது தலையை அசைத்தவாறு காளைகள் அவர்களை பின்தொடரும்.
ஆட்டத்தில், சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், ஆட்டக்காரரை முட்டுவது போல, ஆவேசமாக பாயும். அப்போது, குச்சிகளை தரையில் ஊன்றி தடுத்து ஆட்டக்காரர் எருதின் தாக்குதலில் இருந்து தப்பிப்பார்.
இந்த பாரம்பரிய கலை மாறாமல்,கிராம மக்கள் ஆட்டத்தை ஆடி கொண்டாடி வருகின்றனர்.
இளைஞர்கள் ஆயத்தம்
மார்கழி மாதம் முழுவதும், கிராமங்களில் சலகெருது ஆட்டத்தை ஆடும் மக்கள், தை பிறந்ததும், சிறப்பு பொங்கலை எருதுக்காக வைத்து வழிபடுவர்.
கால்நடைகளின் தெய்வமாக கருதப்படும் ஆல்கொண்டமால் கோவிலுக்கு, எருதை அழைத்து செல்வது வழக்கம்.
கரியாஞ்செட்டிபாளையத்தில் சலகெருது ஆடும் எருதை, கோப்பம்மன் கோவிலில் இருந்து காணும் பொங்கலன்று, கோட்டூர் சல்லிவீரம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று பூஜை நடக்கிறது.
எருதுகளுக்கு பால் போடும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறும். இதற்கான ஆயத்தப்பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: தினமலர்
Comments
Post a Comment