பூலித்தேவன் உண்மை வரலாறு

இதுவன்றோ உண்மை வரலாறு?
பகுதி ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02AHujbjm2D3errtn8XxFbFSeeRqmDdRhZ83gH7Pzt5NxoKtT3GyAakFjK3zWh1WHjl&id=100003223617350&mibextid=Nif5oz
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய பாளையக்காரர்களின் கலகங்களெல்லாம் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் குழுமம் ஆர்க்காட்டு நவாபுகளின் சார்பாகக் கப்பம் தண்ட வந்ததை எதிர்த்து பாளையக்காரர்கள் சிலர் செய்த கலகங்களேயாகும்; அவை இங்கிலாந்தின் குடியேற்ற (காலனிய) ஆட்சியை எதிர்த்து நடந்த ‘விடுதலைப் போர்கள்’ ஆகா.  இங்கிலாந்து ஒரு குடியேறி (காலனிய) அரசாக இன்னும் உருவாகியிராத காலத்தில் நிகழ்ந்த கலகங்களே அவையாகும்.

முதலாவது, அப்‘பாளையங்கள்’ பெரிய அரசுகளோ மீப்பெரிய நிலப்பரப்புகளோ ஆகா.  பத்து, இருபது, முப்பது எனும் எண்ணிக்கையிலிருந்த நிலப்பரப்புகளே அன்றைய பாளையங்கள்.  அதாவது, பாளையக்காரர்கள் மன்னர்கள் ஆகார்.  பின்னாளின் ‘சமீன்’ என்றழைக்கபட்ட குறுநிலப் பரப்பைக் கொண்டிருந்தவர்களே அப்பாளையக்காரர்கள். அவர்களைச் ‘சிற்றரசர்கள்’ என்றுகூட வகைப்படுத்த முடியாது; சிறிய படைகள் இருந்ததால், அவர்களைக் ‘குறுநில மன்னர்கள்’ எனலாம்.

ஆங்கிலேயருக்கெதிராகக் கிளர்ந்த பாளையக்காரர்களின் கலகங்களில் முதல் கலகம் பூலித்தேவன் தலைமையில் 1775ஆம் ஆண்டுக்கும் 1767ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த கலகமாகும்.

1751ஆம் ஆண்டில் ஆர்க்காட்டு நவாபாயிருந்த அன்வருத்தின் முகமது கானின் மகன் முகமது அலிக்கும் சந்தாசாகிப்புக்கும் இடையில் நவாபு பதவிக்கான சண்டை முண்டது.

இந்நிலையில், பூலித்தேவன் ஆற்காட்டு நவாபுக்குக் கப்பம் கட்ட மறுத்தார்.  ஆர்க்காட்டு நவாபு முகமதலி அதனால் தம் அண்ணனாகிய மக்பூசுக்கானை (Mahfuzkhan)  அப்பூலித்தேவனை ஒடுக்குமாறு ஏவினான்.   ஆங்கிலக் கிழக்கிந்திய குழுமத்தின் கர்னல்  அலெக்சாண்டர் எரானின் (Colonel. Alexander Heron) தலைமையில் சென்ற மக்பூசுக்கானின் ஆர்க்காட்டுப் படை 1755ஆம் ஆண்டில் திருநெல்வேலியை நோக்கி புறப்பட்டது; முதலில் அது மதுரையை கைப்பற்றியது

கப்பம் கேட்டு ஆற்காட்டு நவாபு முகமது அலி விடுத்த ஆங்கிலக் கிழக்கிந்திய குழுமத்தின் படையை எதிர்ப்பதற்காக அக்கம் பக்கத்து பாளையங்களின் உதவியைப் பூலித்தேவன் நாடினார்.

மியானா, முடிமியா, நபிகான் கட்டக் (Mianah, Mudimiah and Nabikhan Kattak) ஆகிய பத்தானியர்கள் (Pathans) அப்போது கரு நாடக நவாபின் அதிகாரிகளாக மதுரை-திருநெல்வேலிப் பகுதிக்கு ஆட்சிப்பொறுப்பிலிருந்தனர்.  சந்தா சாகிபின் ஆதரவாளர்களான இம்மூன்று பத்தான்களும்,  முகமது அலிக்கு எதிராகப் பூலித்தேவனின் பக்கம் சாய்ந்தனர்.

சிவகிரிப் பாளையம் தவிர பிற மறவர் பாளையங்கள் மட்டுமே பூலித்தேவனின் பக்கம் நின்றன.  எட்டையபும், பாஞ்சாலக்குறிச்சி ஆகிய இரண்டு தெலுங்குப் பாளையங்களும் பூலித்தேவனின் அணியில் சேரவில்லை.  அதேவேளையில், இராமநாதபுரச் சேதுபதியும் புதுக்கோட்டை மன்னரும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின் பக்கம் சாய்ந்தனர்.  பூலித்தேவன் இதனால் மைசூரை ஆண்டுவந்த ஐதரலியின் உதவியையும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் குழுமத்தின் உதவியையும் நாடினார்.  மராத்தியருடன் போரிட்டுக்கொண்டிருந்த ஐதரலியால் பூலித்தேவனுக்கு உதவ முடியவில்லை.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின் 1,000 படைஞருடனும்  ஆர்க்காட்டு நவாபு மக்பூசுக்கானுக்கு உதவ விடுத்த 600 படைஞருடனும் வந்த நவாபு படைகள் பூலித்தேவனுடன் மோதிய களக்காட்டுப் போரின்போது, பூலித்தேவனுக்கு உதவ திருவாங்கூர் மன்னர் விடுத்த 2,000 படைஞர்களுடன் மோதிய ஆர்க்காட்டு நவாபின் படை தோல்வியைத் தழுவியது.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமம் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் குழுமத்துடன் முட்டி மோதிக்கொண்டிருக்கையில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமம் யூசுப்கான் அல்லது கான்சாகிப் எனும் மருத நாயகத்தின் தலைமையில் விடுத்த படை 1761ஆம் ஆண்டில் நெற்கட்டும் செவ்வல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியது.  இதற்கிடையில்,  ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமம் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் குழுமத்தைத் தோற்கடித்தது.  இந்நிலையில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்திற்குத் தெரியாமல் பாளையக்காரர் சிலருடன் கமுக்கமாக உறவாடி வந்ததாகக் குற்றஞ்சாட்டி, 1764ஆம் ஆண்டில் யூசுப்கானைத் தூக்கிலிட்டது.

அதே ஆண்டில் நெற்கட்டும் செவ்வலுக்குத் திரும்பி வந்த பூலித்தேவனை, 1767ஆம் ஆண்டில் கேப்டன் கேம்ப்பெல் தலைமையிலான ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின் படை தோற்கடித்தது.  உயிர் தப்பித்த, பூலித்தேவன் தலைமறைவாகச் சுற்றித் திரிந்து பிறகு இறந்துபோனார்.

பாளையங்களின் கலகங்களை வீழ்த்தியபின் 1801ஆம் ஆண்டுதான் ‘கருநாடக ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் வாலாசா (கருநாடக) நவாபை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு ‘சென்னை மாகாணத்’தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர்.  அது வரையில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின் படைகள், நவாபுகளுக்குக் கூலிப்படைகளாகத்தான் இருந்துவந்தன.  1785ஆம் ஆண்டு ‘பிட் இந்தியா சட்டத்’தின் (Pitt India Act)) அடிப்படையில் சென்னை, பம்பாய், வங்காளம் ஆகிய மூன்று மாகாணங்களை ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமம் உருவாக்கியது.   1855ஆம் ஆண்டில் கடைசி கருநாடக நவாபான ‘குலாம் முகமது கௌசுக்கான்’ மகப்பேறின்றி இறந்த பிறகு, அந்நவாபு நாட்டுக்குப் பிறங்கடை (வாரிசு) இல்லையென்று சொல்லிப் ‘பிறங்கடை இன்மை கோட்பாட்டின்’ (Doctrine of Lapse) அடிப்படையில் கருநாடக நவாபுகளின் ஆட்சிப்பரப்பை ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமம் தனதாக்கிக்கொண்டு நேரடியாகவே ஆளத் தொடங்கியது.  இந்நாள் வரையில், தமிழகம் ஆங்கிலேயரின் குடியேறி நாடாக (காலனி) ஆகவில்லை.  

ஆங்கிலேய அரசின் குடியேறி (காலனிய) அரசை எதிர்த்துப் பூலித்தேவன் போரிடவில்லை என்பது இதனால் விளங்கும்.  கருநாடக நவாபுகளின் கூலிப்படையாக வந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின் படைகளை எதிர்த்துதான் பூலித்தேவன் போரிட்டான்.  அப்பூலித் தேவனை ‘முதல் சுதந்திரப் போராட்ட வீரர்’ என்று சொல்வது இதனால் மிகைப்படுத்தப்பட்ட இட்டுக்கட்டலாகும்.  மேலும், சாதி வண்ணம் பூசப்பட்டு இந்த இட்டுக்கட்டல் ஊதிப் பெரிதுப்படுத்தப்படுகிறது.

தொடரும்...

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)