ஹொய்சாள வீரசோமேஸ்வரரின் அரியலூர் கல்வெட்டு

ஹொய்சாள வீரசோமேஸ்வரரின் அரியலூர்  கல்வெட்டு

அரியலூர் மாவட்டம் காமரசவள்ளி சிவன் கோவிலுள் கணபதி சன்னதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது.

போசளமன்னர் வீரசோமேஸ்வரரின் மெய்க்கீர்த்தியில் அவருடைய பல்வேறு பட்டப்பெயர்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. 

அவை சமஸ்தபுவனாஸ்ரய, ஸ்ரீபிருதிவி வல்லப, மகா ராஜாதிராஜ, பரமேஸ்வர, துவராபதி பூர்வராதீஸ்வர, யாதவகுலாம் பரத்யமணி சர்வக்ஞ சூடாமணி, மலராஜராஜ, மலபருபா, கண்டரதந, பிரசண்ட கண்ட பேரு, அநேகாந்த வீரநர, சகாயசூர, சனிவாரசித்திகிரி, துர்க்கமல்ல, சலேதங்கராமன், வைரிப கண்டீரவ, மகதராஜ்ய நிர்மூல, பாண்டியகுல சமூத்திரண, சோளராஜ்ய பிரதிஷ்டாசாரிய, நிச்சங்கபிரதாப, சக்கரவத்தி போசள ஸ்ரீவீரசோமிஸ்வர தேவரசர் என்னும் பட்டப்பெயர்களாகும்.

இதில் இம்மன்னர் வாணகோவரையர்கள் ஆட்சி செய்த மகதராச்சியத்தையும், பாண்டிய மன்னர்களையும் வென்றவன் என்றும் சோழ நாட்டில் சோழ மன்னரின் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் குறிப்பிடப்படுகிறார். 

துவாரபதி என்ற நகரம் மகாபாரத காலத்தில் துவாரகையென ஸ்ரீ கிருஷ்ணனின் தலைநகரமாக விளங்கியது. அந்த நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மன்னர்களின் பரம்பரையில் வந்தவன், யாதவகுலத்தைச் சேர்ந்தவன் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

இம்மன்னர் காமதவல்லியில் (காமரசவல்லி) முகாமிட்டிருந்தபோது அவர் முன்பாகக் கோயில் தானத்தாரும் தாகவாயில் உடையான் ஆண்டான் என்பவனும் வண்ணமான மதுராந்தக நல்லூர் என்ற ஊரில் இருந்த நில உரிமை(கரை) பற்றிய வழக்கை விசாரணைக்கு வந்தனர். 

இவ்வழக்கில் அந்த ஊரில் உள்ள நிலங்களின் உரிமை கோயிலுக்குச் சொந்தமானதா அல்லது தாகவாயில் உடையானுக்குச் சொந்தமானதா என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் தாகவாயில் உடையானுக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அவரிடமிருந்த நிலங்கள் ஏற்கனவே கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அப்படியே அந்த உரிமை தற்போது கோயிலுக்குத் தொடர்ந்து வரவேண்டுமென்று மன்னர் தீர்ப்புக் கூறியுள்ளார்.

இக்கல்வெட்டிலிருந்து இப்போசள மன்னர் இப்பகுதிக்கு வருகை தந்தது பற்றியும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களின் உரிமைபற்றிய ஒரு வழக்கை விசாரித்தது பற்றியும் அறியமுடிகிறது. இன்றும் இவ்வூரில் காமரசவல்லி கோயிலுக்கு வல்லாளராஜன் கோயில் என்ற பெயர் மக்கள் வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கீழவண்ணம் என்ற ஊர் காமரசவல்லி என்ற ஊர் அருகே உள்ளது. கல்வெட்டுக் குறிப்பிடும் வண்ணமான மதுராந்தகநல்லூர் இவ்வூரே எனலாம்

-----------------------------------------------------------------------------------------------------------
Source : Aatrupadai

Comments

Popular posts from this blog

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்- ஜாக்சன் துரை கடிதம்

போசளமன்னன் வீரசோமேஸ்வரன் யாதவகுலம் என்று சொல்லும் அரியலூர் கல்வெட்டு

விஜயநகர இளவரசர் குமார கம்பன்னர் பற்றிய இரண்டாம் மாறவர்மன் வீரபாண்டியனின் திருக்களக்குடி கல்வெட்டு