கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்- ஜாக்சன் துரை கடிதம்
இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் சந்திப்பில் ஏற்பட்ட போர் நிகழ்வை பற்றி ஜாக்சன் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதம்.
"பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாகிய கட்டபொம்மு நாயக்கன் என்னை போட்டிக் காண வருவதாகப் பாவனை காட்டி 4000 போர் வீரர்களுடன் இராமநாதபுரம் வந்து தங்கினான்.
9.9.1798 மாலை 5 மணிக்கு என்னை காண வேண்டும் என ஆள் மூலம் சொல்லி அனுப்பினான். நான் மறுநாள் காலை 10 மணிக்கு காணலாம் என சொல்லி அனுப்பினேன்.
குறித்த காலத்தில், அவனும், அவனுடைய தம்பி ஊமையும், தானாபதியும், படைவீரர் சிலரும் அடைவாக வந்தனர்.
அவனை உரிமையோடு இருக்கச்செய்து நம் ஆட்சிக்குரிய வரியைச் செலுத்த வேண்டிய முறையை குறித்து உரைத்தேன்.
ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் உள்ளச்செருக்கோடு ஊக்கமுடன் பேசினான்.
கண்ணியம் வாய்ந்த நம் கும்பெனி ஆளுகையை மதியாமல் திண்ணியனாய் நின்று நாளும் அவன் செய்துவரும் தீங்குகளை எல்லாம் தெளிவுற எடுத்துக்காட்டி இனிமேல் பாங்குடன் அடங்கி நடந்துவரும்படி பண்போடி கூறினேன்.
அங்ஙனம் இதமாக நான் கூறி வருங்கால் அவன் மதம் மீறித் திடீரென்று திமிறி எழுந்து வெளியே போனான்.
நம் தளபதியாகிய கிளார்க் (Clarke) வேகமாய் எதிரே புகுந்து அவனை இடைமறித்தான். மறித்த அவனை மறுத்து ஒன்றும் சொல்லாமல் தன் கையிலிருந்த கட்டாரியால் அந்த கட்டபொம்மு கடுத்துக் குத்தினான். குத்து மார்பின் வலப்புறத்தில் மடுத்துப் பாயவே அவ்விடத்திலேயே வீழ்ந்து அவன் துடித்து இறந்தான்.
அடுத்திருந்த அவன் படைகளுக்கும் பாதுகாப்பிற்காக வைத்திருந்த நம் பட்டாளங்களுக்கும் கலகம் மூண்டது. பலர் மாண்டனர். பின்பு அனைவரும் பறந்து போயினர்.
அக்கொடியவன் குதிரையில் ஏறி தானையோடு தருக்கிப் போனான். தானாபதி மட்டும் அகப்பட்டான். ஆவனைப் பிடித்து சிறைபடுத்தி இருக்கிறேன்.
கட்டபொம்மு என்னும் துஷ்டனை கொட்டம் அடக்கி அடியோடு தொலைத்து ஒழிக்காவிடின், நம் கும்பெனி ஆட்சி இங்கு நிலைத்திருக்காது.
இந்நிலைமையை மாட்சிமைமிக்க அதிபதிகள் ஆழ்ந்து ஆலோசித்து உடனே விரைந்து ஆவணசெய்ய வேண்டும்.
இச்சண்டையில் இறந்த தலகர்த்தனான கிளார்க் பலவகையிலும் மிகவும் சிறந்தவன். அநியாயமாக இங்கே இறந்து போயினான். அவனுடைய மனைவியும், மூன்று குழந்தைகளும் அனாதரவாயுள்ளனர். தகுந்த ஆதரவு தந்து பாதுகாக்க வேண்டியது கும்பெனியின் கடமையாகும்.
இனி இங்கு நான் நடக்கவேண்டிய நிலையைக் குறித்து அங்கிருந்து வரும் உத்தரவை ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறேன்."
Ramnad, 27th, Sept, 1798
W.C.JACKSON
கவனிக்க வேண்டிய குறிப்புகள்
செப்டெம்பர் 10ந் தேதி நடந்த இந்த நிகழ்வுக்கு, ஜாக்சன் செப்டெம்பர் 21ந் தேதியிட்டு தான் கடிதம் எழுதி இருக்கிறான்.
உடனடி முடிவு எடுக்கமுடியாமல் காலம் தாழ்த்தி எழுதி அனுப்பி இருக்கிறான். இதிலிருந்தே தவறு அவன் மீதுள்ளது என்பது நமக்கு புலனாகிறது.
இதன்பின் நடந்த நீதி விசாரணையில் ஜாக்சனும், தானாபதி பிள்ளையும் ஆஜரானர்கள்.
விசாரணையின் முடிவில் ஜாக்சன் பேட்டி என்ற வடிவில் அகம்பாவதோடும், அவமதிப்போடும், கட்டபொம்மனை கைது செய்யும் நோக்கோடும், கடுமையாக நடந்திருக்கிறான். அதனால் தான் கலகம் மூண்டது. என்று முடிவு செய்யப்பட்டு ஜாக்சன் அப்பதவியிலிருந்து அகற்றப்படுகிறார்.
தானாபதி பிள்ளை விடுதலை செய்யப்பட்டு "உங்கள் மன்னரை நாங்கள் காண விருபம்புகிறோம், அவர் விளக்கத்தை எங்களிடம் நேரில் அளிக்கலாம்" என்று கூறியிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், இரமநாதபுரத்தில் பேட்டியின் போது நடந்த விவரங்கள் அனைத்தும் இந்த கடிதத்தின் மூலம் (சிலவற்றை ஜாக்சனுக்கு சாதகமாக எழுதி இருந்தாலும்) நாம் அறிய முடிகிறது. இதே நிகழ்வை சினிமாவிலும் காணமுடிகிறது (சினிமாவுக்கான வசனங்களை தவிர).
வரலாறு இப்படி இருக்கையில் சிவாஜிகணேசன் நடித்ததால் தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு புகழ் சேர்ந்தது என்று கூறுவது "எத்தனை பெரிய பொய் எத்தனை பெரிய புரட்டு" என்பதை மக்களின் பார்வைக்கே விட்டுவிடலாம்.
வசைப்பாடி வயிறு வளர்ப்போருக்கும், பிழைப்பு வாதத்திற்கும் வேண்டுமானால் உங்கள் பொய்கள் கொஞ்ச நாட்கள் உதவலாம்.
உண்மை ஒருபோதும் மறைவதில்லை. காலம் உள்ளவரை கட்டபொம்மன் என்ற மாவீரரின் புகழ் பாடப்பட்டுக்கொண்டே இருக்கும்.
வெற்றிவேல் ! வீரவேல் !
Comments
Post a Comment