15. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாஞ்சாலங்குறிச்சி படுகளத்தின் கோர சரித்திரம், பசுவந்தனை போர்
பாஞ்சையர் உளவு கண்டது
கும்பெனி படையினர் வரவை பாஞ்சை பதியினர் எதிர்பார்த்து நின்றனர். ஒரு வாரம் முன்பே அரசமுத்து, வீரமணி என்னும் ஒற்றர்களை ஊமைத்துரை யாரும் அரியா வண்ணம் ஏவியிருந்தார். அவர்கள் குதிரைகளுக்கு புல்லுக்கட்டுகள் விற்பவரை போல் உள்ளே புகுந்து முறையே உலவரிந்து படையெழுச்சி செய்யப்படும் தேதியை அறிந்தவுடன் பாஞ்சை வந்து நிலையை தெரிவித்தனர். உடனே படையைத் தாயார் செய்தார் ஊமைத்துரை. வரும் வழியே இடைமறித்து அடியோடு ஒழிக்க தீர்மானித்தார்.
பாஞ்சை மீது படை எடுக்க துணிவு கொண்டது
பாளையங்கோட்டைவிருந்து 27.03.1801ந் தேதி காயத்தாறு வந்து சேர்ந்த மேஜர் மெக்காலே இரண்டு தினங்களாக அங்கேயே தங்கி அதாவது 29ந் தேதி
தளபதிகளோடு கலந்தாலோசித்து ஊமைத்துரையின் செயல்திறன்களை தெளிவாக விளக்கினார். படையெழுச்சி செய்யவேண்டியதையும், வழியிடையே அபாயங்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
படையெழுச்சி
மார்ச் மாதம் 30ந் தேதி காலை சூர்ய உதயத்திற்கு சற்றே முன்னர் பாஞ்சை மீது படையெடுக்க தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்தார். பீரங்கி வண்டிகள் முன்னே செல்ல, குதிரை படைகள், காலாட்படைகள் அடுத்தடுத்து அணிவகுக்க உப தளபதிகள் சூழ மேஜர் காலின் மெக்காலே குதிரை மீதமர்ந்து பயணத்தை தொடர்ந்தார்.காலை உணவிற்கு கடம்பூர் தாண்டி ஒட்டாரம்பட்டி என்னும் ஊரில் தங்கி மீண்டும் புறப்பட்டனர்.
இரவெல்லாம் காத்திருப்பு
இரவிலே வரக்கூடும் என ஊமைத்துரை படைகள் குதிரைகுளம் என்னும் ஊருக்கருகில் எதிர்பார்த்து புதர்களில் மறைந்திருந்தினர். இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தனர்.
கடும் கோரப்போர் மூண்டது
மறுநாள் பிற்பகலுக்கு பின்னே படைகள் வருவதை உறுதி செய்தனர். அருகில் நெருங்கியவுடன் மான வீரர்கள் மண்டியெழுந்தனர், சுற்றி வளைக்க முற்பட்டனர் அதற்குமுன் பீரங்கிகளையும், கை வெடிகளையும் கொண்டு தாக்கும்படி உத்தரவு இடப்பட்டவுடன் குண்டுமழை பொழிந்தனர். போர்க்களம் படு கோரமாய் இருந்தது. தீ பொறிகளை தாங்கிவந்த குண்டுகளை நெஞ்சிலே தாங்கி அஞ்சாமல் முன்னேறி பாய்ந்தனர் பாஞ்சை வீரர்கள். பலர் மாண்டும் போயினர், அதைக்கண்டு பின்னே வந்தவர் வெறிபிடித்த வேங்கைகளாய் வேல், வாள், வல்லையங்கள் கொண்டு கும்பெனி படைகளை நாலாபுறமும் நாசப்படுத்தினர். இதைக்கண்ட கிராண்ட் என்பவர் படைகள் சிதடிக்கப்பட்டுவிடும் என எண்ணி குதிரை படைகளை முன்னோக்கி செலுத்தினார். அவரின் வருகைக்காக காத்திருந்த ஆதிராமு என்ற மானமிகு போர்வீரன் விரைந்து பாய்ந்து வேளால் குத்தி குதிரையிலிருந்து கீழே வீழ்த்திக் கொன்றான், குதிரைப்படைக்கு உயர்ந்த தலைவனாய் இருந்த அவன் மாண்டுபடவே அந்த குதிரைமேல் இவ்வீரன் ஏறி குதிரை படையை கட்டுப்படுத்த முயன்றான் இந்த பாஞ்சை வீரன். கும்பெனியர் தொடர்ந்து சுட்டுக்கொண்டே குதிரைப்படையை முன்னோக்கி செலுத்தினர் அவை பாய்ந்து வரும் போக்கிலேயே வேள்கொண்டும், வல்லயங்கள் கொண்டும் தாக்கி சாய்த்தனர். பதினாறு குதிரைகளுக்கும் மேல் மாண்டு வீழ்ந்தன. சில பெருங்காயங்களோடு சாய்ந்தன. குதிரை படைகளோடு அந்த பாஞ்சை வீரன் போராடுவதை கண்ட வீரராமலு என்னும் போர் வீரன் ஒரு பெரிய குதிரை மீதேறி விரைந்து வந்து நொடிபொழிதில் இன்னொரு தளபதியை வெட்டிச் சாய்த்து விட்டு போனான். கும்பெனியர் அபாயங்களை கடந்து பாஞ்சை செல்லவே முயன்றனர். ஆனால் பாஞ்சையர் எந்த உபாயத்தையும் எதிர்பாராமல் வீரவெறியராய் குண்டுகளையும், வெடிகளையும் கண்டு அஞ்சாமல் நெஞ்சம் துணிந்து நேரே பாய்ந்து போராடியதால் அன்று 96 பேர் மாண்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்பட்டனர். கும்பெனியர் தரப்பில் இரண்டு முக்கிய தளபதிகள் மூன்று ஜமேதார்கள், ஒரு அவுல்தார் உட்பட 64 வீரர்கள் மாண்டிருந்தனர். பதினாறு குதிரைகளும் மாண்டிருந்தன. பீரங்கிகள் கொண்டு தாக்காமல் இருந்திருந்தால் கும்பெனியர் படை முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும். ஆனால் விதி பீரங்கி வடிவில் வந்து பாஞ்சையர் வெகுவாக இறக்க நேர்ந்தது. போரிலே மடிவதை வீரமரபாக கொண்ட பாஞ்சையர் துளியும் அச்சமின்றி எதிர்த்து சமராடினர். இந்தப் போர்களம் பொன்னெழுத்துக்களால் போற்றப்பட வேண்டியவை என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
"கண்ணு முழியிலே சீவனிருந்தாலும் கம்பளத்தார் நிலை குன்றார் என்று மண்ணுலகெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தநாம் மாறாகி வாழ்வது மண்பாமோ? "
"தொண்டை குழியிலே சீவன் கிடந்தாலும் தோக்கல வார்குலம் அஞ்சாதென்று பண்டை பழமொழி கூறி வருவதைப் பாரினில் யாரும் அறிந்திருப்பார் !"
இடைமறித்து படுகளப்படுத்தி மாண்டவர் போக பாஞ்சைக்கு மீண்டுவந்தனர். கும்பெனியர் மாண்டவர்களை அங்கேயே புதைத்து விட்டு அருகில் இருக்கும் பசுவந்தனை சென்று அங்கேயே தங்க உத்தரவிட்டார் தலைமை தளபதி. மிக கவனமாக திட்டம் தீட்டியும் வழியிலே மடக்கப்பட்டத்தை எண்ணி மனதிற்குள் வெந்து நொந்தான் தலைமை தளபதி. அன்றைய பாசறை பசுவந்தனையாக இருந்தது. இரு தரப்பும் பெரும் சேதத்தை சந்தித்திருந்தன.
ஊமைத்துரையின் வீர சாகசம் என்பது 60 நாட்கள் ஆகியும் அவரை நெருங்ககூட முடியவில்லை என்பதே வரலாறு.
Comments
Post a Comment