14.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பெரும் போருக்கு இருதரப்பும் ஆயத்தம் ஆகுதல்.
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைகளை பலப்படுத்துதல்
சேனைகளை அனைத்தையும் தன் குதிரை மீதேறி சுற்றி பார்க்கிறான். அறிவுரைகள் கூறுகிறான்.தளபதிகளோடும் எவ்வாறு போரை முன்னெடுக்க வேண்டும் என்று ஆலோசிக்கிறான். மொத்தம் பதினொரு படைகள் வந்திருந்தன. எட்டயபுரத்தார் இன்னும் வரவில்லை.
மாசி மாதம் சிவராத்திரி தோரும் குலதெய்வமான ஜக்கதேவிக்கு பூஜைகள் செய்து தொழுவது பாஞ்சை மரபினர் வழக்கம். அதுபோல் இந்தமுறையும் பூஜைகள் செய்யப்பட்டு சில முடிவுகள் எடுக்க அனைத்து தளபதிகளும் பூஜையில் ஒருங்கே கூடினர். பூஜை முடிந்து, ஊமைத்துரை, துரைசிங்கம், காரியதரிசி சங்குபிள்ளை மற்றும் அனைத்து தளபதிகளும் அரங்கமால் என்னும் அரச சபையில் கூடினர். இதற்கு முன்னரே பாஞ்சை பாளையத்தின் எல்லைகளை பலப்படுத்த பத்து நில மண்டலங்களாக பிரித்து அவற்றுக்கு தக்க தலைவர்களை நியமித்திருந்தனர். அவை முறையே
பசுவந்தணை,
பட்டனமருதூர்,
புதியம்புத்தூர்,
ஆதனூர்,
கெவுணகிரி,
வேடநத்தம்,
தூத்துகுடி,
புதுக்கோட்டை,
பேரூரணி,
ஆத்தூர் ஆகும். இவற்றின் தலைவர்களாக
சின்னபொம்மையா,
முத்தையா,
முத்துக்குமாரசாமி,
பால்ராஜா,
வீரதளவாய்,
ரணவீரமுத்து,
ஜகவீரராமு,
பராக்கிராமபாண்டியன்,
பால்பாண்டியன்,
பூலோகபாண்டியன் முறையே நியமிக்க பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சபையில் கூடி எதிரிகளுடைய உளவுகளையும், சேனைகள் திரட்டுகிற அளவுகளையும், எதிரிகளை எப்படி எதிர் கொள்வது குறித்தும் பேசினர். போர்பயிற்சிகள், ஆயுதங்களை கையாள்வது, திடீர் தாக்குதல் செய்வது போன்றவற்றையும் விவாதித்தனர். வரப்போகோகும் பேராபத்துகளில் இருந்து அரசையும், மக்களையும் காக்க அரசரின் முன் உறுதியான சபதமேற்றனர்.
கும்பெனி சேனைகள் அனைத்தும் காயத்தாரில் குவிந்தது.
காயத்தாறு பாஞ்சாலங்குறிச்சிக்கு மேற்கே 22 கல் தூரத்தில் உள்ளது. பெரிய சாலை இவ்வூரின் அருகே செல்கிறது. சென்னை போன்ற இடங்களில் இருந்து படைகள் வருவதற்கு ஏற்ற இடம் என்று இந்த ஊரில் படைகளை ஒருங்கிணைக்க மேஜர் மெக்காலே முடிவு செயதார். கடந்த 09.02.1801 அன்று படையுடன் பாஞ்சை சென்று போர் புரிய முடியாமல் 10.02.1801 அன்று பாளையங்கோட்டை திரும்பியதிலிருந்து சேனைகளை திரட்டும் பணியிலேயே மிக கவனமாக இருந்தான். அந்த காலகட்டத்தில் பல இடங்களில் ஊமைத்துரையின் படைகள் வெற்றிமேல் வெற்றி பெற்று ஒவ்வொரு பகுதியையும் மீட்டனர். ஆயுதங்களை சேகரித்தனர் ஆனால் மெக்காலே நேரடியாக மோத முன்வரவில்லை. மோதினால் வெற்றி பெற இயலாது என தெளிவாக அறிந்து இருந்தான். அதனால் மீண்டும் பெரும் போருக்கு ஆயத்தமாகி சேனைகளை திரட்டிக் கொண்டிருந்தான். திருச்சி, மதுரை, இராமநாதபுரம், பெங்களூரு, ஆற்காடு போன்ற பகுதிகளில் இருந்து படைகள் மார்ச் 25ந் தேதி வரை ஒவ்வொன்றாக கயத்தாரிலே வந்து குவிந்து கொண்டு இருந்தன. 27.03.1801 அன்று மேஜர் மெக்காலே ஒரு பெரும் படையுடன் பாளையங்கோட்டைலிருந்து காயத்தாறு வந்து சேர்ந்தான். எட்டயபுரத்திற்கும் படைகளோடு வரும்படி ஓலை அனுப்பி இருந்தான். அவர்களும் கிளம்ப தயாராயினர். கயத்தாரில் பெரும் சேனைகளை கண்ட மெக்காலே பெருமகிழ்ச்சி கொண்டான்.
கும்பெனியர் படைபலம்
இந்த பதினோரு படைகளின் விவரம் யாதெனில்
1. பயோனீர் பட்டாளம்
2. வங்காள பீரங்கிப்படை
3. 74வது ஆங்கில படைபிரிவு
4. கவர்னரின் படைபிரிவு
5. சுதேச குதிரைபடை
6. சுதேச காலாட்படை
7. நேசக் காலாட்படை
8. நாட்டுக் காலாட்படை
9. சுதேச துப்பாக்கி படை
10. தேசத் தனிபடை
11. சுதேச முதல்படை
இந்த படைகளுக்கு முறையே தலைமை ஏற்றவர்கள்
1. Capt. Bagshaw
2. Lieut. Graham
3. Capt. John Campbell
4. Lieut. Grant
5. Lieut. Line
6. Major. Sheppard
7. Capt. Nagle
8. Capt. N.Smith
9. Capt. Hazard
10. Capt. D.Mucdonald
11. Capt. G.Lang
ஆகியோராவர். மற்றும் இவர்களை ஒருங்கிணைக்க
1. Vessey வெஸ்ஷி
2. Welsh வெல்ஷ்
3. Smart ஸ்மார்ட்
ஆகியோர் முப்பெரும் சேனைத் தலைவர்களாய் இருந்தவர்களாக பொறுப்பேற்று இருந்தனர்.
இவற்றுள் 4800 காலாட்படை வீரர்களும். போர்முறைகளில் கைதேர்ந்த 124 நிபுணர்களுடன் கூடிய பெரும் குதிரை படையும், பீரங்கி படையும், அறிய வெடிவகைகளும், குண்டுகள், கருமருந்துகள், துப்பாக்கிகள் கொண்ட பெரும் சேனைகளோடு பெரிய சமவெளியில் பட்டாளங்கள் அணிவகுப்பு முறையில் வகைவகையாய் குழுமி இருந்தனர்.
பாளையங்கோட்டைவிருந்து தப்பி ஓடிய ஒரு சின்ன பாளையக்காரனை பிடிக்க இந்த பொட்டல் காட்டில் எவ்வளவு ஆயத்தங்கள், எவ்வளவு தளபதிகள், எவ்வளவு பீரங்கிகள், எவ்வளவு படைகள், எவ்வளவு ஆலோசனைகள் என பொறுப்பேற்ற தளபதிகள் சிலருக்கு நகைப்பகாவும், சிலருக்கு திகிலாகவும் இருந்தது. பின்னர் எதிரியின் தன்மை குறித்து தலைமை தளபதி வெஸ்ஸி அவர்களுக்கு நடந்தவற்றை விளக்கினான் அதன் பின் சற்றே யோசிக்க தொடங்கினர். காரணம் பிப்ரவரி 02, ஆம் தேதியில் தப்பிய மாவீரர் ஊமைத்துரையை மார்ச் 27 ந் தேதி வரை நெருங்க கூட முடியாமல் தோல்விமேல் தோல்வியை சந்தித்த கும்பெனியற்கு மாபெரும் திகிலை ஏற்படுத்தி இருந்தார் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.

Comments
Post a Comment