12. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - தூத்துக்குடி மீட்பு போர் - கும்பெனி தளபதியை படகிலேற்றி தாய் நாடு அனுப்பியது.

"High Spirited People - உயர்ந்த உணர்ச்சியுள்ள மக்கள்"


மாணமும் வீரமும் நேர்மையும்  பரம்பரையாகவே கொண்ட மரபினர் மீது கொடுங்கோபத்தை மூட்டி வீண் பகைமையை வளர்த்தமையால் கும்பெனியற்கு தொல்லைகலும், அல்லல்களும் வம்பாக வந்தமைந்தன. பிறர் புரிந்த ஈன இழிவுகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் கொதித்தெழுந்து  மான உணர்ச்சியோடு நேரே எதிர்த்து போராட துணிந்தனர்..

தூத்துக்குடி கும்பெனியர் கோட்டையை மீட்க திட்டம் தீட்டுதல்:

எதிரிகள் சேனையையும், ஆயுத கலன்களை பெருக்குவதையும் ஊமைத்துரை அறிந்தார். அவர்களுடைய ஆற்றல்களை குறைக்க வேண்டும் என எண்ணினார், அதற்கு கும்பெனியரின் முக்கியமான இடங்களை எல்லாம் குறிவைத்து மீட்கும் படலத்தை இன்னமும் விரைந்து முடிக்கினார். அதற்க்கான அடுத்த குறி தூத்துக்குடியை மீட்பது என தீர்மானித்தார். ஏனெனில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உப்பளங்கள் பல இவரது பாளையத்துக்கு உரிமையாய் இருந்தன, ஆகையால் அந்நகரை மீட்டே தீர்வோம் என சபதம் ஏற்றார். திட்டம் தீட்டுவதில் ஊமைத்துரைக்கு நிகர் வேறு எவரும் இல்லை.
வெள்ளையர் நெஞ்சம் வெந்து கலங்கியது:
கடல்வழியே சென்று வருவதற்கு வசதியாக தூத்துக்குடியில் கும்பெனியர் ஒரு கோட்டையை அமைத்திருந்தனர். பல பண்டகசாலைகளோடு பெரும் கருவூலமாக அந்த கோட்டை நிலவியது. தங்கள் வியாபாரங்களை விருத்தி செய்ய  வெள்ளையர் அங்கே குடியேறியும் இருந்தனர்.  கோட்டையையும் குடிகளையும் பேணிக்காக்க இரண்டு தளபதிகளுடன் கூடிய சிப்பாய் படைகள் காவல் புரிந்து வந்தன. நல்ல நேரம் பார்த்து அங்கே படையெழுச்சி செய்ய உறுதி பூண்டார். 29.02.1801 நாள் குறிக்கப்பட்டு போரிட படையை தயார் செய்ய துவங்கினார். இவர் வீரவேகங்களை அறிந்து வெள்ளையர் உள்ளங்கள் திகிலோடு நெஞ்சம் கலங்கியதை அவர்களது குறிப்புகள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

"While we were reinforcing our detachment from a distance, the insurgents who had their resources nearer at hand, were not idle; but rising in various quarters they possessed themselves of forts, arms, and in so active a manner, that we hardly ever knew where to find them."

"தூரத்திலிருந்து அதிகமான படைகளை நாம் திரட்டிக் கொண்டிருந்த பொழுது, எதிரிகள் தங்களுக்கு வேண்டிய ஆதரவுகளை விரைந்து சேர்த்தனர். சோம்பல் யாதுமின்றி பல இடங்களிலும் விரைந்து படைக்கலங்களைத் திரட்டிக் கோட்டையை பலப்படுத்தி நின்றனர். யாரிடமும் யாண்டும் கானமுடியாத வேகமும் சுறுசுறுப்பும் அவர்களிடம்  வீறுகொண்டு நின்றன."

பத்து சேனைத் தலைவர்களின் தலைமையில் படை தயார் செய்யப்பட்டது. பஞ்சாலங்குறிச்சிக்கு தென்கிழக்கே 17 மைல் தூரத்தில் உள்ள தூத்துக்குடியை அடைந்தனர். படைகள் நான்கு புறங்களிலும் சூழ்ந்து அணியாய் நின்றது. படைகளை கண்ட கும்பெனி படையும் தளபதியும் முதலில் அஞ்சினர், ஆயினும் பின்பு எதிரிகளை எதிர்க்க துணிந்து உள்ளே புகாதபடி அரணமைத்து நின்றனர். துப்பாக்கிகள் கொண்டு சுட முயன்றனர். வீறு கொண்டு எழுந்த பாஞ்சை வீரர்கள் கும்பெனி சிப்பாய்கள் மீது நேரடியாக பாய்ந்து தாக்கினர், தாக்குப்பிடிக்க முடியாத கும்பெனி சிப்பாய்கள் சிதறி ஓடினர். படைத் தலைவனை கைது செய்தனர். மேலும் சில இந்நாட்டு உதவி அதிகாரிகளும் பிடிப்பட்டனர், அவர்களை தப்பி போக அனுமதித்தனர். வெள்ளை அதிகாரியை மட்டும் பிடித்துக் கொண்டனர். கோட்டை சுற்றிவளைக்கப் பட்டு பின்னர் 64 வீரர்கள் கோட்டை உள்ளே புகுந்தனர். யுத்த தளவாடங்களை தேடினர், முக்கிய வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு வேறு எதையும் தொடாமல் வெளியே வந்தனர்.


மறுகிய கும்பெனி தலைவன் நிலைகண்டு கருணை காட்டிய பாஞ்சை படையினர்:

கைது செய்யப்பட்ட வெள்ளை  படைத் தலைவன் உயிர் போய்விடும் என்று  உள்ளம் கலங்கி மறுகி நின்றான். அவன் நல்ல வாலிபன், திருமணம் ஆகாதவன். கொடிய ஆயுதங்கள் சூழ அவன் கைதியாய் நின்ற நிலை பெரிதும் பரிதாபமாய் இருந்தது.

இந்நாட்டு மொழிகள் எதுவும் அறியாத அவன் எதுவும் பேசாமல் மருண்டு கண்களை விழித்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட பாஞ்சை சேனாதிபதியான பராக்கிரமபாண்டியன் உள்ளம் இறங்கினான். யாதொரு இடையூறும் அவனுக்கு செய்யவேண்டாம் என படைவீரர்களுக்கு கட்டளையிட்டு காப்பாற்றினான். அதைக் கண்டு "என் ஆருயிரை காக்கும் பேரருபகாரி நீர் என்று அந்த பாஞ்சை தலைவனை நோக்கி வாஞ்சையுடன் பார்த்தான் வெள்ளை தளபதி.

தோணியில் ஏற்றி அவன் நாட்டுக்கு அனுப்பியது
பாஞ்சை தளபதி அந்தப் படைத் தலைவனிடம் வாஞ்சை காட்டி " நீர் இப்பொழுதே இந்த இடத்தை விட்டு உமது சீமைக்கு ஓடி போய் விடுகிறாயா?" என்று சைகையாக கேட்டான். அவன் சரி என்று தலை அசைத்து இசைந்தான். உடனே அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கே மீன் பிடிக்க இருந்த தோணியில் ஏற்றி 'உன் ஊருக்கு விரைந்து போய்விடு' என்று  கருணை காட்டி பாஞ்சையரின் மேலான பண்பு எத்தகையது என்பதை அவனுக்கு உணர்த்தினான். கொடிய எதிரிகளாயிருந்தும் பிடிபட்ட என்னை கொல்லாமல் உயிருடன் போக அனுமதித்த அந்த மக்களை நினைத்து நெஞ்சம் உவந்து சென்றான் என்பதை இவ்வாறு குறித்து வைத்துள்ளனர்.

"In proof, however, of the noble people spirit of these untutored savages, they created the officer with the utmost kindness; and without exacting any promise from him, permitted his embarkation in a fishing boat, for an english Settlement."

"நல்ல கல்வி பயிற்சி இல்லாத இந்த முரட்டு மக்கள் பகைமை பூண்டிருக்கும் அந்த படை தலைவனை மிகவும் அன்போடு பேணி, யாதொரு அவமானமும் செய்யாமல்  மீன் படகில் ஏற்றித்
தன் சொந்த இங்கிலீஷ் நாட்டிற்க்கு போகும்படி அனுப்பியிருப்பது அவர்களுடைய இயல்பான உயர்ந்த பெருந்தன்மைக்குச் சிறந்த அடையாளமாய் அமைந்திருந்தது."
பாஞ்சை வீரர்களின் தொடர் தாக்குதல்களை கும்பெனியர் அனுபவித்து வந்தாலும், அவர்களிடம் உள்ள உயரிய குணங்களையும், பெருந்தன்மைகளையும் உணந்த போதெல்லாம் உள்ளம் உவந்து புகழ்ந்துள்ளனர் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் சான்றுகள். "The noble spirit" "உயர் குடிப்பிறப்பின் உயிர் ஒளி" என இப்படி குறிப்பிட்டிருப்பது அவரது மகிழ்ச்சி நிலையை நாம் உணர்ந்து கொள்வோம்.மேலும்

"The enemy made good use of their time, and seized on Tuticorin" 

தம் காலத்தை நன்கு உபயோகித்து, எதிரிகள் தூத்துக்குடியை பிடித்துக் கொண்டனர்." என்ற அவர்களது குறிப்புகள் அவர்களது தோல்வியையும், பாஞ்சையர் வெற்றியையும் தெளிவாக விவரிக்கிறது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து உணரலாம். பாஞ்சாங்குறிச்சியின் வரலாறுகள் இரத்தத்தால் எழுதப்பட்டவை என்றே நமக்கு தோன்றுகிறது.


Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)