10. மாவீரர் ஊமைத்துரை வரலாறு- காடல்குடி போரும், குசல வீரகஞ்சய பாண்டியனும், தோற்று ஓடிய கேப்டன் ஹாசார்டும்
காடல்குடி பாளையம் - குசல வீரகஞ்சய பாண்டியன்
கி.பி. 1801 பிப்ரவரி மாதம் 2 ந் தேதி பாளையங்கோட்டை சிறை தகர்ப்பிற்கு பிறகு புரட்சி படையினர் இழந்த பாளையங்கள் அனைத்தையும் மீட்டிருந்தனர் அவற்றுள் முக்கியமானது காடல்குடி பாளையம். பாஞ்சாலங்குறிச்சியும் காடல்குடியும் மிகநெருங்கிய இரத்த உறவுகள். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்களின் தாயார் ஆறுமுகத்தம்மாளும், காடல்குடி மன்னர் வீர கஞ்சய பாண்டியன் அவரது மனைவி சண்முகத்தாய் அம்மாளும் உடன்பிறந்த சகோதரிகள். காடல்குடி மன்னரும், கட்டபொம்மனை போன்று வரிசெலுத்த மறுத்தவர், அதனால் ஆங்கிலேயர்கள் காடல்குடி மீது படையெடுத்து கைப்பற்றினர், பல இன்னல்களை சந்தித்தவர், பாளையம் தாக்கப்பட்ட பின்னர் பாஞ்சாலங்குறிச்சி சென்று அங்கு நடந்த போரில் களம் கண்டவர். கட்டபொம்மன் தண்டிக்கப்பட்ட அதே நாளான 16.10.1799 இல் வீரகஞ்சய பாண்டியனும் தூக்கிலிடப்பட்டார்.. அவருக்கு லவ வீரகஞ்சய பாண்டியன் மற்றும் குசல வீரகஞ்சய பாண்டியன் என இரு பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் குசல வீரகஞ்சய பாண்டியன் ஊமைத்துரையை சிறையிலிருந்து மீட்டதில் இவரின் பங்கு மிகப்பெரியது. இங்குதான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இவரும் இழந்த பாளையத்தை மீட்டு கோட்டையை சீரமைத்து ஆட்சி செய்து வந்தார். ஊமைத்துரை நடத்திய அனைத்து போர்களிலும் இவர் பங்கு மகத்தானது.
காடல்குடி போரும், கும்பெனியர் தோற்றதும்
தொடர் தோல்விகளை கண்ட கும்பெனியர், பாளையங்கள் ஊமைத்துரையின் கட்டுக்குள் வந்ததையும் தங்களது ஆயுதங்கள் பறிபோவதையும் பார்த்து உள்ளுக்குள் குமிறினர். மற்ற பாளையக்காரர்கள் ஊமைத்துரைக்கு உற்ற துணையாய் இருப்பதை வெறுத்தனர். ஆகையால் காடல்குடி பாளையதத்தை மீண்டும் கைப்பற்ற துணிந்தனர். கேப்டன் ஹாஸார்டு( captain Hazaard) என்பவரின் தலைமையில், மதுரையிலிருந்து ரகசியமாக 9வது ரெஜிமெண்ட் மற்றும் 16வது ரெஜிமெண்ட் 2வது பட்டாலியனுடன் இணைந்து காடல்குடியை தாக்க முற்பட்டனர். இந்த தாக்குதல் நடக்கப்போவதை முன்னேரே அறிந்து கொண்ட ஊமைத்துரை, பாஞ்சை படையினர் 2000 பேரை முன்னரே அனுப்பி தயார் நிலையில் நிறுத்தி இருந்தார். மிகவும் அனுபவமும், ஒழுங்கும் நிறைந்த வெள்ளையர் படை, வீரத்தில் சிறந்த பாஞ்சை படையினர் முன்னே எவ்வளவு எதிர்த்து போராட முடியுமோ அவ்வளவு எதிர்த்து போரிட்டனர், ஆனால் வெறிகொண்டு தாக்கிய பாஞ்சை வீரர்களால் 3 முக்கிய கும்பெனி தளபதிகள் கொல்லபட்டனர் மற்றும் 18 வீரர்கள் ஊனமுற்றனர். பெருதிரலோடு பாஞ்சை வீரர்கள் போராடுவதக் கண்ட கேப்டன் மனம் திகைத்து நொந்து போனான். காடல்குடி சார்பாகவும் நிறைய வீரர்கள் இறந்து போயினர். இறந்தவர்களை அப்பிடியே போட்டுவிட்டு கும்பெனியர் பின்வாங்கி தோற்று ஓடினர். பின்னர் இறந்த வெள்ளையர் உடல்களை அடக்கம் செய்திட, காடல்குடி படையினர் மனிதாபிமானத்துடன் உதவினர். நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பாளையங்கோட்டை சென்று மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அதிகாரிகளின் உள்ளக் குமுறல் இன்னும் அதிகரித்து.
#முரசு10
Comments
Post a Comment