9. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - இழந்த பகுதிகளின் உரிமைகளை மீட்டது மற்றும் ஆயுதச்சாலைகளை ஆயத்தம் ஆக்கியது..

பாஞ்சையர் பலம்  மேலோங்கியது

இரண்டாம் முயற்சியில் போர் செய்யவந்த கும்பெனி படைகள் புறமுதுகிட்டு பின்வாங்கிய நிகழ்வு மக்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் ஒரு புத்துயிர் பிறந்ததை உணந்தனர். இதற்கு மீண்டும் கட்டப்பட்ட கோட்டையும், அரணை பலப்படுத்தியதுமே முக்கிய காரணமாக அமைந்தது. 

இழந்த உரிமைகள் மீட்டது
நெல்லைச்சீமையில்  ஏற்கனவே இழந்த தமக்கு உரிமையுள்ள  எல்லா பகுதிகளையும் ஊமைத்துரை மீட்டெடுத்தார். மேலும் எதிரிகளின் இயல்புகளையும், செயல்களையும், மதியூகங்களையும் ஒற்றர் மூலம் கண்காணித்து வந்தார், சேனைகளளை அதிகரிக்க அவர்கள் முயற்சிப்பதையும் அறிந்தார். 

ஆயுத சேமிப்பு
அடுத்ததாக ஆயுத சாலைகளை தக்கபடி ஆயத்த படுத்த வேண்டும் என உறுதி பூண்டார். முன்னர் தங்களிடமிருந்து கவர்ந்த ஆயுதங்களை எல்லாம் சிந்துபூந்துரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆயுத சேமிப்பு கிடங்கில் சேர்த்து வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வேல், வாள், வளரி, வெடிபொருட்கள் மற்றும் நிறைய போர்க்கருவிகள் அங்கே சேர்த்து வைத்திருந்தனர். திட்டம் வகுக்கப்பட்டு எழுநூறுக்கும் மேற்பட்ட வீரர்களை தயார்செய்து வீரலக்கு, ரணவீரசின்னு, ஜெயவீரராமு, ஆதிமுத்து, இராமதளவாய், இராஜபொம்மு, சின்னபாலு ஆகிய இவர்களின் தலைமையில் ஆயத்தமாகி குறித்த இடங்களிலிருந்த ஆயுத சாலைகள் சுற்றிவளைக்கப்பட்டன. அங்கே இருந்த காவலாளிகள் அனைவரும் அடித்து விரட்டப்பட்டனர். அனைத்து போர்ப் படைக்கலன்களையும் மீட்டுக் கொண்டுவந்தனர். ஊமைத்துரையின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

மேற்கண்ட போர்க்கருவிகள் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்திற்கு உரிமையாய் இருந்த ஊர்கள் எல்லாம் முன்னர் முதல் பாஞ்சைப்போர் காலத்தில் சேனைத் தளபதியாக இருந்த பானர்மேன்(John Bannerman) 21.10.1799 அன்று இட்ட கட்டளைப்படி பறித்து சேர்ந்தவை.
மேலும் பல ஆயுத வகைகள் அதாவது ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருததுகள், பீரங்கிகள் இவற்றை எல்லாம் கண்ணும் கருத்துமாய் ஊமைத்துரையின் படையினர் பாஞ்சாலங்குறிச்சி கொண்டுவந்து சேர்த்தனர். இவ்வாறு சேர்ப்பதை கேள்வியுற்ற கும்பெனியின் சேனைத் தலைவர்களுக்கு மிகவும் கொதிப்பை மூட்டியது. கையறு நிலையிலிருந்த கும்பெனியருக்கு தம்முடைய மதிப்பும், மானமும் அழிந்து போவதை எண்ணி உள்ளுக்குள் மறுகினர் என்பதை அவர்கள் எழுதி வைத்திருப்பதிலிருந்து அறியலாம்.

"Several of our small posts in the surrounding country fell into the hands of the enemy, by which means they have captured nearly one thousand musquets with their ammunition."

"தேசத்தில் நமக்கு உரிமையாய் இருந்த  பகுதிகள் பல எதிரியின் கைவசமயின; அதன் மூலமாக சுமார் ஆயிரம் வெடி பொருட்களும், அநேக யுத்த தளவாடங்களும் அவர்கள் வசப்படித்தியிருந்தனர்."

அண்ணனை கொன்றதும், அரசினை கவர்ந்ததும், பல இன்னல்கள் புரிந்ததும் கண்டு கும்பெனியரை ஒளித்தழிப்பதே ஒரே முக்கிய நோக்காக கொண்டார் மாவீரர் ஊமைத்துரை சாமி.

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)